இஸ்கான், ஹரே கிருஷ்ண நிலம், கருப்பூர், சேலம். 636012.
https://maps.app.goo.gl/AycP874MUd4WAXx9A
சேலத்தை அலங்கரிக்கப்போகும் அற்புதமான கற்கோயில்
பகவான் கிருஷ்ணர், கலி யுக மக்களை உய்விப்பதற்காக, சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். இந்தியர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவருக்கும் தமது கருணை சென்றடையும் என்பது சைதன்யரின் கணிப்பும் விருப்பமும் ஆகும். இதனை அவர் பின்வருமாறு கூறியுள்ளார்:
ப்ருதீவீதே ஆசே ஜத நகராதி க்ராம
ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம
“உலகிலுள்ள எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் எனது பெயர் போற்றப்படும்.” (சைதன்ய பாகவதம், அந்திய காண்டம் 4.126)
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த காலத்தில், அவர் தென்னிந்தியா முழுவதும் பயணம் செய்து தமது கருணையை வழங்கியிருந்தார். பிற்காலத்தில், ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், அவரது சீடரும் இஸ்கான் இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியருமான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் ஆகியோர் இப்பகுதியில் கோயில்களை நிறுவி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் திருநாமத்தைப் பரப்பினர். அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மற்றும் ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் பெருமைகளைப் பறைசாற்றுவதற்காக, சேலம் மாநகரில் கருங்கற்களாலான அழகிய கோயில் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது.
கோயிலின் சிறப்பம்சங்கள்
தென்னிந்தியா மிகவும் அழகான நேர்த்தியான கருங்கல் கோயில்களுக்குப் புகழ்பெற்றது என்பதால், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சேலம் கிளை சார்பாக, 4.5 ஏக்கர் பரப்பளவில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்பங்களுடன் ஒரு கற்கோயில் கட்டப்பட்டு வருகிறது. குறைந்தது 1,000 ஆண்டுகள் நீடித்து நிற்கப்போகும் இஸ்கானின் இந்த முதல் கற்கோயிலில் ஸ்ரீஸ்ரீ கௌர ராதா-கோகுலானந்தர் பிரதான விக்ரஹங்களாக வீற்றிருப்பர். 12,000 டன் எடையும் 108 அடி உயரமும் கொண்ட கோபுரம், 1,50,000 டன் எடையுடைய இதர பகுதிகள், 25,000 சதுரடியில் 2,000 பேர் தரிசனம் பெறத்தக்க மண்டபம் என கோயில் மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தரும். கோயிலின் பிரதான மண்டபத்தைச் சுற்றி ஸ்ரீல பிரபுபாதர் நினைவிடம், ஸங்கீர்த்தன மண்டபம், வேத பாடசாலை, வேத ஸம்ஸ்கார மண்டபம், சமையலறை, பிரசாதக் கூடம், விருந்தினர் அறைகள், 4,000 பேர் அமரத்தக்க திறந்தவெளி அரங்கம், பிரம்மசாரி ஆஷ்ரமம் என பல்வேறு இதர கட்டிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
தென்னிந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி, கட்டிடக் கலையினை தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லும் பாரம்பரியமிக்க சிற்பிகளின் பரம்பரையில் வந்த அனுபவம் வாய்ந்த ஸ்தபதியின் மேற்பார்வையில் அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன.
மிகவும் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு வரும் இக்கோயிலுக்கு வருகை தருமாறு கோயில் நிர்வாகம் அனைவரையும் வரவேற்கின்றது.