திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்
தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்.
மூலவர்: வலஞ்சுழிநாதர்
அம்மன்: பெரியநாயகி
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம், காவேரி, அரசலாறு
தலவிருட்சம்: வில்வமரம்
ஊர்: திருவலஞ்சுழி
மாவட்டம்: தஞ்சாவூர்
இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்து வருகிறார். சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமை உடையது. காவிரி நதி, இங்கே சற்றே திரும்பி வலமாக வளைந்து பாய்வதால் இவ்வூர் திருவலம்சுழி என பெயர் பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்வேத விநாயகரது தும்பிக்கை வலப்புறமாக வளைந்திருப்பதும் இப்பெயர் வர காரணம் என கூறப்படுகிறது. கோயில் வரலாறு: இந்திரன் வழிபடும் தலம் ‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இது எனக் கூறப்படுகிறது. ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால் தேவேந்திரன் சபிக்கப்பட்டார். சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார்.
தலவரலாறு
அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம். சின்னஞ்சிறு மூர்த்தி விநாயகர் கடல் நுரையால் செய்யப்பட்டதால் எந்தவித அபிஷேகமும் இங்கு பிள்ளையாருக்குச் செய்யப்படுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படும். கோயில் அமைப்பு: வலஞ்சுழிநாதர் கோயிலின் உள்ளே வலப்புறம் பைரவர் சன்னதியும், இடப்புறம் ஜடாதீர்த்தமும் ஜடா தீர்த்த விநாயகர் சன்னதியும் உள்ளன. தொடர்ந்து பலிபீடம், மூஞ்சுறு, கொடி மரம் உள்ளன. அதற்கடுத்து வெள்ளை விநாயகர் கோயிலின் தூண் மண்டபமும் கருவறையும் உள்ளன. கருங்கல்லால் ஆன ஜன்னல் இச்சன்னதியில் உள்ளது. கல்லால் ஆன விளக்குகளைப் போன்ற அமைப்பு இச்சன்னதியின் தனித்துவங்களில் ஒன்றாகும். தூண்களில் நுணுக்கமான சிற்ப அமைப்புகள் காணப்படுகின்றன. விநாயகர் சன்னதியின் வலப்புறம் நால்வர் சன்னதி உள்ளது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் திருப்பணி செய்த தலம் திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் திருக்கோயில்.
தலபெருமை:
இந்திரன் வழிபட்ட தலம். மகாவிஷ்ணு, மார்கழி மாத சஷ்டி திதியில் இத்தலத்தில் உள்ள வெள்ளை விநாயகரை நேரில் வந்து வழிபட்டதாகவும் புராணங்கள் இருக்கின்றன. ராஜராஜ சோழன், போருக்குப் போகும் போதெல்லாம் தன்னுடைய இஷ்ட தெய்வங்களின் ஒன்றான வெள்ளை விநாயகரை வழிபட்டு, பின்னர்தான் போருக்குச் சென்று வெற்றி வாகை சூடிவந்ததாக இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. இதர தலங்களில் விநாயகரின் இரண்டு தந்தங்களில் ஒன்று மட்டும் கூர்மையாக இருக்கும். மற்றொன்று பாதி ஓடிந்த நிலையில் காணப்படும். ஆனால் இந்தத் தலத்தில் இரு தந்தங்களும் கூர்மையானதாகக் காட்சியளிக்கின்றன. மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை ஆகியவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அமைவிடம்
கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறும். தினமும் சுவாமி வீதியுலா நடைபெறும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேவேந்திரன் பூஜை, தேரோட்டம் நடைபெறும். சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடையும்.
கோயில் Google map link
Swetha Vinayagar Temple
https://maps.app.goo.gl/6VYU45FcDu7vTAh99
if you want to support us via UPI id
9655896987@ibl
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCv4F_mJmuC7-bA9B0v20B5w/join
- தமிழ்