பஞ்சகவ்யம் தயாரிப்பு முறைகள்
பஞ்சகவ்யம் நாட்டுப்பசுமாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய சாணம், கோமியம், பால், தயிர், நெய் போன்ற ஐந்து பொருட்களால் செய்யப்படுகிறது. பஞ்சகவ்யத்தில் பல்வேறு தயாரிப்பு முறைகள் உள்ளது, அதில் ஒரு தயாரிப்பு முறையை மட்டும் விளக்கியுள்ளோம்.
தேவையான பொருட்கள் (20 லிட்டர் தயாரிப்பதற்கு)
சாணம் - 3 கிலோ
கோமியம் - 3 லிட்டர்
பால் - 2 லிட்டர்
புளித்த தயிர் - 2 லிட்டர் (4 நாள் புளித்தது)
அழுகிய வாழைப்பழம் - 12
இளநீர் - 2 லிட்டர்
கரும்பு சர்க்கரை - 1 கிலோ அல்லது கரும்பு சாறு - 2 லிட்டர்
கடலைப்புண்ணாக்கு - 1.5 கிலோ
முதிர்ந்த தேங்காய் தண்ணீர் - 2 லிட்டர்
(குறிப்பு: இதில் நெய் சேர்க்கப்படவில்லை)
தேவையான உபகரணங்கள்
பஞ்சகவ்யம் தயாரிக்க மண் பானை, பிளாஸ்டிக் டிரம் அல்லது சிமெண்ட் தொட்டி போன்றவற்றைப் பயன்படுத்தலாம் (இரும்பு, அலுமினிய பாத்திரங்கள் பயன்படுத்தக் கூடாது), கலக்கிவிட 5 அடி நீளமுள்ள குச்சி, மூடிவைக்க பருத்தித்துணி அல்லது சணல் சாக்கு (தேவையான அளவில்)
செய்முறை
பஞ்சகவ்யம் தயாரிப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே தேங்காயை உடைத்து தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும், அந்த தேங்காய் தண்ணீர் நன்றாக புளித்திருக்கும். கடலைப் புண்ணாக்கை 2 லிட்டர் தண்ணீரில் பஞ்சகவ்யம் தயாரிப்பதற்கு முன்பே ஒரு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.அழுகிய வாழைப்பழத்தை தோல் உறித்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பிளாஸ்டிக் டிரம்மில் சாணம், கோமியம், பால், நன்றாக புளித்த தயிர், கரும்பு சாறு, இளநீர், பிசைந்த வாழைப்பழம், அரைத்த கடலைப் புண்ணாக்கு, புளித்த தேங்காய் தண்ணீர் போன்றவற்றை மேற்கண்ட வரிசையில் சேர்த்து கலக்கவும்.
கவனிக்க வேண்டியவை
பிளாஸ்டிக் டிரம்மின் வாயை பருத்தித் துணியால் கட்டி, நிழலான இடத்தில் வைக்க வேண்டும். காலை, மாலை இரு வேளையும் வலஞ்சுழியாகக் கலக்கி விடவும், கலக்கிவிடும் குச்சியை சுத்தமாக கழுவி வைக்கவும். டிரம்மின் வாய் பகுதியையும் சுத்தமாக வைக்கவும். நாய், பெருச்சாளி போன்றவை சேதம் செய்யாமல் பார்த்துக்கொள்ளவும் 14 நாட்களில் பஞ்சகவ்யம் பயன்படுத்த தாயராகி விடும். பஞ்சகவ்யத்தை 6 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி. பஞ்சகவ்யம் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
பயன்கள்
பசுமாட்டு சாணத்தில் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்ற நுண்ணுயிர்கள் உள்ளன. மாட்டு கோமியத்தில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தும், நுண்ணுயிர்களும் உள்ளன. பாலில் அமினோ அமிலங்கள் உள்ளன. தயிரில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இளநீர் மற்றும் தேங்காய் தண்ணீரில் வளர்ச்சியூக்கியும் தாது உப்புக்களும் உள்ளன. பஞ்சகவ்யத்தைப் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது. பஞ்சகவ்யம் சிறந்த வளர்ச்சியூக்கியாக இருப்பதோடு, பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை தரக்கூடியதாகவும் இருக்கிறது. பஞ்சகவ்யத்தில் பேரூட்ட சத்துக்களும், நுண்ணூட்ட சத்துக்களும், பயிர் வளர்ச்சியூக்கிகளும், எண்ணற்ற நுண்ணுயிர்களும் மிகுந்த அளவில் உள்ளன