ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
ஆகமல மாகி நின்று புவிமீதில்
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
ஆளழக னாகி மின்று விளையாடிப்
பூதல மெலாம லைந்து மாதருட னேக லந்து
பூமிதனில் வேணு மென்று பொருள்தேடிப்
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
பூவடிகள் சேர அன்பு தருவாயே
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
தீரனரி நார ணன்றன் மருகோனே
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
தேடஅரி தான வன்றன் முருகோனே
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
கோமளிய நாதி தந்த குமரேசா
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
கோடை நகர் வாழ வந்த பெருமாளே