திருவாரூர் தியாகராஜர் கோயில் (Tiruvarur Thyagaraja Temple) திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் மிகப் பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் சைவ மரபில் பெரிய கோயில் எனவும் திருமூலட்டானம் எனவும் பூங்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. சைவத்திற்கு கோவில் தில்லை என்றால் இறைவன் உறையும் மூலஸ்தானம் திருவாரூர் ஆகும். இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87ஆவது சிவத்தலமாகும். திருவாரூர் சப்தவிடங்க ஸ்தலங்களின் தலைமை இடமாகவும் திகழ்கிறது. இது திருவாசகத் திருத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. இக்கோவிலில் தான் பசுவிற்கு நீதி வழங்கினார் மனு நீதி சோழன். மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.