பூரட்டாதி நட்சத்திரக் கோயிலான அரங்கநாதபுரம் அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் (யானை ஏறா மாடக் கோயில்)
காஞ்சி மகா பெரியவர் இத்தலத்தில் வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தியானம் செய்துள்ளார்.
“கோச்செங்கட் சோழன் கட்டிய 70 மாடக் கோயில்களில் ஒன்று இது” என்றார் நண்பர் பூதலூர் நடராசன்.
திருச்சியிலிருந்து வந்தால் பூதலூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் வருகிறது அரங்கநாதபுரம். நெல் வயல்கள் சுற்றிலும் பசுமை போர்த்திக் கிடந்தன. வழி நெடுகே காவிரி, வாய்க்கால்களில் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.
கோச்செங்கட் சோழன் என்ற கோச்செங்கணான் ‘களவழி நாற்பது’ நூலின் பாட்டுடைத் தலைவன். நாயன்மார்களில் ஒருவன். உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவனுக்குப் போர்களில் நாட்டமில்லை. ஆலயங்கள் எழுப்புவதிலேயே அதிக ஈடுபாடு கொண்டிருந்தான். இதையறிந்த சேரன் கணைக் கால் இரும்பொறை சோழ நாட்டை ஆக்கிரமிக்கப் போர் தொடுத்துச் சிறைப்பட்டான். புலவர் பொய்கையார் வேண்டுகோளுக்கு இணங்க சேரனை மன்னித்து விடுதலை செய்தான் கோச்செங்கணான். அதனால் எழுந்ததே களவழி நாற்பது.
பூரட்டாதிக்குத் தனிச் சிறப்பு உண்டு.
பஞ்ச பாண்டவர்களில் சகாதேவன் ஜோதிடக் கலையை நன்கு கற்றவன். மகாபாரதப் போர் தொடங்குவதற்கான நேரத்தைக் குறித்துத் தருமாறு துரியோ தனன் அவனிடம் கேட்டான். “அமாவாசை திதி அன்று காலை சூரிய உதயத்தின்போது ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்” என்று கூறினான் சகாதேவன். இதைக் கேட்ட கண்ணன் தன் மாய சக்தியால் அமாவாசையை முந்தி வரச் செய்தான். தவறான நேரத்தில் துரியோதனன் போர் துவங்கினான். எதிரி வந்து கேட்டாலும் சாஸ்திரத்தை மறைக்காத நேர்மைக் குணம் கொண்ட சகாதேவன் பிறந்தது பூரட்டாதி நட்சத்திரத்தில்!
“பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்தார் காலபைரவர். அவற்றை ஏழு யானைகள் மீது ஏற்றி காலச் சக்கரத்தை உருவாக்கிய தலம் இது. இங்குள்ள திருவானேஷ்வரை வணங்கினால் சகாதேவனைப் போல் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளலாம். பூரட்டாதி நட்சத்திர நாளன்று இத்தலத்தில் வழிபட்டு வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். ஆடை தானம் செய்தால் ஏழேழு ஜன்ம பாவங்கள் தலைமுறையைத் தொடராமல் விலகும். இங்குள்ள மூலவருடைய விமானம் கஜ கடாட்ச சக்தி விமானம். தேவர்களின் தலைவன் இந்திரன் ஐராவத யானை மீது ஏறிப் பூரட்டாதி நாளன்று இங்கு வழிபாடு செய்வதாக ஐதீகம்” என்றார் அர்ச்சகர்.
மூலவர் திருவானேஷ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கியும், அன்னை காமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரரும், விநாயகப் பெருமானும் புடைப்புச் சிற்பமாக உள்ளனர். பிராகாரத்தில், சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடனும், துர்கை அம்மன், கஜலட்சுமி, பிரம்மா, நவக்கிரகங்கள் தனித்தனி சன்னிதிகளுடன் காணப்படுகின்றனர்.
கோயிலைத் தாங்கியவாறு ஒரு பிரம்மாண்ட யானை நிற்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள குறுகிய படிக்கட்டுகளில் ஏறிச் சென்றால் சிவனைத் தரிசிக்கலாம். தீர்த்தக்குளம், ‘ஏழு கால தீர்த்தக் குளம்’ எனப்படுகிறது. சுமார் ஒரு கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரை ஓடுகிறது. காஞ்சி மகா பெரியவர் இத்தலத்தில் வந்து ஒரு வாரம் தங்கி இருந்து தியானம் செய்துள்ளார்.
“மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் கொண்டு வரும் நைவேத்தியங்களை வைத்துப் பகல் 12 மணி அளவில் அன்னதானம் செய்யப்படுகிறது”
கோயில் முகவரி: அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில், அரங்கநாதபுரம் போஸ்ட் - 613 104, திருக்காட்டுப்பள்ளி வழி, திருவையாறு தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்.
தரிசன நேரம்: காலை 7 மணி முதல் 9 வரை. மாலை 5.30 மணி முதல் 7 வரை. உட்புறக் கிராமக் கோயில் என்பதால் போன் செய்து விட்டுச் செல்லவும்.
தொடர்புக்கு : 94439 70397, 97150 37810
அருகாமையில்: தஞ்சாவூர் பெரிய கோயில் உள்ளிட்ட தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள ஏராளமான ஆலயங்கள்.
திருச்சியிலிருந்து போகிறவர்கள் திருச்சி உச்சிப் பிள்ளையார் உட்பட ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் என்று வரிசையாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில் தரிசனம் link
https://youtu.be/M4kvzWTX0Fg
- தமிழ்