சொற்றமிழ்ச்செல்வர் சோலார்சாயி அவர்களின் தெய்வீக குரலில் சுந்தரர் திருப்பாட்டு- இசை - நாம் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------திருமுதுகுன்றம் மிகப் பெரிய கோயில். இத்தலம் இக்காலத்தில் விருத்தாசலம் (Vriddhachalam) என்று வழங்கப்பெறுகின்றது. விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி இடையே உள்ள தலம். (சிதம்பரத்திலிருந்து மேற்கே 45 கிமீ தூரத்தில் உள்ள தலம்).
பதிக வரலாறு : சுந்தரர் திருமுதுகுன்றத்தில் பதிகங்கள் பாடி ஈசனை வணங்கினார். (7.43 நஞ்சியிடை & 7.63 மெய்யை முற்றப் பொடிப் பூசி). ஈசன் 12,000 பொன் அருளினான். ஈசன் தந்த அப்பொற்காசுகளைத் திருவாரூரில் தரவேண்டினார் சுந்தரர். "மணிமுத்தாற்றில் இட்டுப் பின் கமலாலயத்தில் பெற்றுக்கொள்க" என்றான் ஈசன். அவ்வாறே சுந்தரர் அப்பொன்னைத் திருமுதுகுன்றத்தில் மணிமுத்தாற்றில் இட்டார். (அப்படிப் போடுமுன் ஒரு காசை மச்சம்வெட்டிக்கொண்டார் (kept a sample)).
திருவாரூரை அடைந்தபின் பரவையாரோடு கமலாலயத் திருக்குளத்தை அடைந்து தேடியபொழுது அப்பொன் கிட்டவில்லை. அப்பொழுது திருமுதுகுன்றத்து ஈசன்மேல் இப்பதிகத்தைப் பாடி அப்பொன்னைப் பெற்றார் சுந்தரர். திருச்சிற்றம்பலம்
பொன்செய்த மேனியினீர்
புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும்
எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள்
பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாறடிகேள்
அடியேனிட் டளங்கெடவே. 1
உம்பரும் வானவரும்
உடனேநிற்க வேயெனக்குச்
செம்பொனைத் தந்தருளித்
திகழும்முது குன்றமர்ந்தீர்
வம்பம ருங்குழலாள்
பரவையிவள் வாடுகின்றாள்
எம்பெரு மானருளீர்
அடியேனிட் டளங்கெடவே. 2
பத்தா பத்தர்களுக்
கருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே
முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்தா ருந்தடங்கண்
பரவையிவள் வாடாமே
அத்தா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 3
மங்கையோர் கூறமர்ந்தீர்
மறைநான்கும் விரித்துகந்தீர்
திங்கள் சடைக்கணிந்தீர்
திகழும்முது குன்றமர்ந்தீர்
கொங்கைநல் லாள்பரவை
குணங்கொண்டிருந் தாள்முகப்பே
அங்கண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 4
மையா ரும்மிடற்றாய்
மருவார்புரம் மூன்றெரித்த
செய்யார் மேனியனே
திகழும்முது குன்றமர்ந்தாய்
பையா ரும்மரவே
ரல்குலாளிவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 5
நெடியான் நான்முகனும்
இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்திறைஞ்ச
முதுகுன்ற மமர்ந்தவனே
படியா ரும்மியலாள்
பரவையிவள் தன்முகப்பே
அடிகேள் *தந்தருளீர்
அடியேனிட் டளங்கெடவே.
(* தந்தருளாய் என்றும் பாடம்) 6
கொந்தண வும்பொழில்சூழ்
குளிர்மாமதில் மாளிகைமேல்
வந்தண வும்மதிசேர்
சடைமாமுது குன்றுடையாய்
பந்தண வும்விரலாள்
பரவையிவள் தன்முகப்பே
அந்தண னேயருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 7
பரசா ருங்கரவா
பதினெண்கண முஞ்சூழ
முரசார் வந்ததிர
முதுகுன்ற மமர்ந்தவனே
விரைசே ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய்
அடியேனிட் டளங்கெடவே. 8
ஏத்தா திருந்தறியேன்
இமையோர்தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கெல்லாம்
முதுகுன்ற மமர்ந்தவனே
பூத்தா ருங்குழலாள்
பரவையிவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய்
கொடியேனிட் டளங்கெடவே. 9
பிறையா ருஞ்சடையெம்
பெருமான் அருளாயென்று
முறையால் வந்தமரர்
வணங்கும்முது குன்றர்தம்மை
மறையார் தங்குரிசில்
வயல்நாவலா ரூரன்சொன்ன
இறையார் பாடல்வல்லார்க்
கெளிதாஞ்சிவ லோகமதே. 10
திருச்சிற்றம்பலம் . #அண்ணாமலை
#gananalayam #sivalogasivam #vadhavooradigal #ஞானாலயம் #sivalogam #wisdom #selfrealisation #thiruvasagam #gurudharisanam #சிவலோகம் #வாதவூரடிகள் #திருவாசகம் #தருமமிகு சென்னைசிவலோகத்திருமடம் #சைவம் #சிவம் #சிவலோகசிவம் #அன்பேசிவம் #நான்யார் #ஆத்மவிசாரனை #குருதரிசனம்