இருள் விலகி ஒளி பெற... உலக மாயை இருளில் பிணியில் சிக்காமல் . முருகப்பெருமானின் ஒளி வடிவான திருவடி அருள் பெற.. குளிர்ந்த வள்ளியம்மை முக வள்ளியம்மை மணாளா.. சிவகுருவே.. சூரசம்ஹாரம் செய்தவனே
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான
கொங்கைகள்கு லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய டைந்தகுழல் ...... வண்டுபாடக்
கொஞ்சியவ னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ னுங்குரல்கள் ...... கெந்துபாயும்
வெங்கயல்மி ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டுமேலாய்
வெம்பிணியு ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண பைங்கழலொ ...... டண்டஆளாய்
சங்கமுர சந்திமிலை துந்துமித தும்பவளை
தந்தனத னந்தவென ...... வந்தசூரர்
சங்கைகெட மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ ளுந்தநகை ...... கொண்டவேலா
சங்கரனு கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே
சந்திரமு கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ் செந்தில்மகிழ் ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
கொங்கைகள் குலுங்க, வளை செங்கையில் விளங்க, இருள்
கொண்டலை அடைந்த குழல் ...... வண்டுபாட,
கொஞ்சிய வனங்குயில்கள், பஞ்ச நல் வனங்கிளிகள்,
கொஞ்சியது எனும் குரல்கள், ...... கெந்துபாயும்
வெங்கயல் மிரண்ட விழி, அம்புலி அடைந்த நுதல்,
விஞ்சையர்கள் தங்கள் மயல் ...... கொண்டு,மேலாய்
வெம்பிணி உழன்ற, பவ சிந்தனை நினைந்து, உனது
மின்சரண பைங்கழலொடு ...... அண்டஆளாய்.
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப, வளை
தந்தன தனந்த என ...... வந்த சூரர்
சங்கை கெட, மண் திகை எங்கிலும் மடிந்துவிழ,
தண்கடல் கொளுந்த, நகை ...... கொண்டவேலா!
சங்கரன் உகந்த பரிவின் குரு எனும் சுருதி
தங்களின் மகிழ்ந்து உருகும் ...... எங்கள்கோவே!
சந்திர முகம் செயல் கோள் சுந்தர குறம்பெணொடு
சம்பு புகழ் செந்தில் மகிழ் ...... தம்பிரானே.
திருச்செந்தூர் - 0051. கொங்கைகள் குலுங்க
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கொங்கைகள் குலுங்க (திருச்செந்தூர்)
பிறவிக் கடல் விட்டு ஏறி, பெருமான் திருவடி சேர